சிறையில் தப்பி தலைமறைவான 700 கைதிகள்: கண்டுபிடித்து கைது செய்ய வங்கதேச அரசு முயற்சி
சிறையில் தப்பி தலைமறைவான 700 கைதிகள்: கண்டுபிடித்து கைது செய்ய வங்கதேச அரசு முயற்சி
ADDED : ஜன 26, 2025 09:29 PM

டாக்கா: வங்கதசேத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த அரசியல் கொந்தளிப்பின்போது, சிறைகளிலிருந்து தப்பியோடிய 700 கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஜூலை மாத இறுதியில் மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பதட்டமான நேரத்தில் பல சிறை உடைப்பு சம்பவங்கள் நடந்தன. அவற்றில் ஒரு பெரிய சம்பவம் டாக்காவிற்கு அருகிலுள்ள மத்திய நர்சிங்டி மாவட்டத்தில் நடந்தது. அங்குள்ள சிறைகளில் இருந்த 826 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். தப்பியோடியவர்களில் 700 கைதிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக அந்நாட்டு உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி தெரிவித்துள்ளார்..
இது குறித்து ஜஹாங்கிர் ஆலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறையிலிருந்து தப்பியோடிய 700 கைதிகளை கண்டுபிடித்து மீண்டும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பிறகு பொது மன்னிப்பின் கீழ் எந்த குற்றவாளியும் சிறையில் இருந்து விடுவிக்கப் படவில்லை. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு ஜாமினில் உள்ளவர்கள் புதிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
காவல்துறையினருக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால் அவர்கள் கடமைகளைச் செய்வதில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜஹாங்கிர் ஆலம் கூறினார்.