வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்: ஹிந்து கோயில் சேர்ப்பு
வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்: ஹிந்து கோயில் சேர்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 05:57 AM

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் தலையீட்டில், இடைக்கால நிர்வாக அரசு அமைந்துள்ளது. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
வங்கதேசம் உருவாவதற்கு காரணமான, வங்கதேச தந்தை என்றழைக்கப்படும் முன்னாள் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படமே, அந்த நாட்டின் டாகா எனப்படும் கரன்சிகளில் இடம்பெற்று வந்தன.
ஆனால், தற்போது, முஜிபுர் ரஹ்மான் தொடர்பான அனைத்து நினைவுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானின் படங்கள் இல்லாத புதிய கரன்சி நோட்டுகளை, இடைக்கால அரசு வெளியிட்டுள்ளது. இவை விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளன. இவற்றில், கலாசார மற்றும் வரலாற்று அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன. தினாஜ்பூரில் உள்ள 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த காந்தாஜி ஹிந்து கோயிலும் அதில் உள்ளது.
புதிய கரன்சிகள் 1000, 50 மற்றும் 20 ஆகிய மதிப்பில் வெளியிடப்பட உள்ளன. அதே சமயம் ஏற்கனவே உள்ள கரன்சி நோட்டுகளும் செல்லும்.