இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் : சொல்கிறது வங்கதேசம்
இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் : சொல்கிறது வங்கதேசம்
ADDED : டிச 14, 2024 10:11 PM

டாக்கா:'' இந்தியாவுடன் நல்லுறவு நிலவுவதையே விரும்புகிறோம்,'' என வங்கதேசம் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் துவங்கியது முதல், அங்கு சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டவர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள், சொத்துகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதற்கு எதிராக போராடிய ஹிந்து மத அமைப்பு நிர்வாகியை தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், அங்கிருந்து சிலர் தப்பி இந்தியாவிற்கு வந்துள்ளனர். இச்சூழ்நிலையில், நமது வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சமீபத்தில் டாக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு செயலாளரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் முகமது தவுஹித் ஹூசைன் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசுகையில், பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இந்தியாவுடன் நல்லுறவு நிலவுவதையே வங்கதேசம் விரும்புகிறது. இதனை இந்தியாவிடம் தெரிவித்து உள்ளோம். அனைத்து நாடுகளுடனும் சமநிலை மற்றும் மரியாதை அடிப்படையில் உறவு நீடிப்பதை விரும்புகிறோம்.
பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்துவதற்காக சீர்திருத்தங்கள் செய்வது, மாணவர் இயக்கங்களை நிர்வகிப்பது, பொது மக்களின் பிரச்னைகளை சரி செய்வது என சிறந்த நிர்வாகத்தை அளிக்க இடைக்கால அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் பிறகு அரசியல் அதிகாரம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

