வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் அரசியல் பழிவாங்கலால் கொலை; குற்றப்பத்திரிகையில் திடுக்
வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் அரசியல் பழிவாங்கலால் கொலை; குற்றப்பத்திரிகையில் திடுக்
UPDATED : ஜன 06, 2026 09:57 PM
ADDED : ஜன 06, 2026 09:41 PM

டாக்கா : அவாமி லீக் கட்சியின் உத்தரவின் பேரில், அரசியல் பழிவாங்கல் காரணமாக வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி,கொல்லப்பட்டதாக வங்கதேச போலீசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக 17 பேர் மீது முறையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குற்றப் பத்திரிகையில் தெரிவித்து உள்ளனர்.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்திலையில், ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை குறித்து இன்று வங்கதேச போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்ற பத்திரிகையில் கூறியிருப்பதாவது: ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அவாமி லீக் கட்சியின் உத்தரவின் பேரில் அரசியல் பழிவாங்கல் காரணமாக கொல்லப்பட்டு இருக்கிறார். இந்தக் கொலை தொடர்பாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பபட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பேரணிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், ஹாதி தற்போது தடைசெய்யப்பட்ட அவாமி லீக் மற்றும் சத்ரா லீக்கின் கடந்தகால நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஹாதியின் வெளிப்படையான கருத்துக்கள் தடை செய்யப்பட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை கோபப் படுத்தியது. இதன் காரணமாகவே இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இவ்வாறு வங்கதேச போலீசார் கூறியுள்ளனர்.

