ADDED : ஜன 20, 2026 10:33 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி பங்கேற்பதில் இழுபறி நீடிக்கிறது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதனால், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடியாக, 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுக்கிறது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த ஐ.சி.சி.,'இந்தியா வருவது குறித்து இன்றைக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும்,' என கெடு விதித்தது.
இது குறித்து வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில்,''இந்திய கிரிக்கெட் போர்டின் நெருக்கடிக்கு பணிந்து, எங்கள் மீது ஐ.சி.சி. நியாயமற்ற நிபந்தனைகளை விதித்து, நெருக்கடி கொடுத்தால், அதனை ஏற்க மாட்டோம். எங்களை இந்தியாவில் விளையாட வைக்க முடியாது. வங்கதேச அணி வர மறுத்தால், ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது,''என்றார்.
முடிவு எப்போது?
இந்தியா வருவதில்லை என வங்கதேசம் உறுதியாக இருக்கும் பட்சத்தில், புதிய அணியை சேர்ப்பது குறித்து ஐ.சி.சி., நாளை முடிவு செய்யலாம். தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி, 'சி' பிரிவில் இடம் பெறலாம்.

