பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; தலிபான் ஆட்சிக்கு மாறும் வங்கதேசம்
பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; தலிபான் ஆட்சிக்கு மாறும் வங்கதேசம்
ADDED : ஜூலை 26, 2025 03:57 AM

டாக்கா: வங்கதேச வங்கி எனப்படும் அந்நாட்டின் மத்திய வங்கி, பெண் ஊழியர்கள் அரைக்கை வைத்த மேலாடைகள், லெக்கிங்ஸ் அணிய தடை விதித்திருப்பது போராட்டத்தை துாண்டியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024 ஆகஸ்டில் முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் அரசு, மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது.
அதன்பின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது.
இவரது ஆட்சியில், வங்கதேச நிறுவன தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை நினைவுகூரும் விஷயங்களை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அவரது உருவம் பதித்த ரூபாய் நோட்டுகள் வெளியிடுவதை நீக்கியுள்ளனர். முஜிபுர் ரஹ்மானின் பெயரிலான நினைவிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வந்த அரசு, தற்போது கலாசார ரீதியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் மத்திய வங்கியான வங்கதேச வங்கி, சமீபத்தில் பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், பெண்கள் பணிக்கு பொருத்தம் இல்லாத, குட்டையான, அரைக்கை உடைகள், இறுக்கமான லெக்கிங்ஸ் ஆகியவற்றை அணியக் கூடாது. புடவை அல்லது சல்வார் கமீஸ் மட்டுமே அணிய வேண்டும்.
பணியிடத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கு, பெண் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டாக்காவில் உள்ள வங்கதேச வங்கியின் தலைமையகத்திற்கு வெளியே, பெண் ஊழியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், 'எங்கள் உடை; எங்கள் உரிமை; இது தலிபான் ஆட்சியல்ல; இது வங்கதேசம்' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
' எங்கள் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிக்கும் இந்த உத்தரவு, வங்கதேசத்தின் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். சமூக வலைதளத்திலும் வங்கியின் முடிவுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து, வங்கதேச வங்கி இந்த உத்தரவை வாபஸ் பெற்றது.