சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது; சொல்கிறார் முகமது யூனுஸ்
சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது; சொல்கிறார் முகமது யூனுஸ்
UPDATED : ஆக 11, 2024 11:54 AM
ADDED : ஆக 11, 2024 11:43 AM

டாக்கா: 'நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களை பாதுகாக்கும் வகையில் மாணவர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
மாணவர்களின் கையில்!
இந் நிலையில் வங்கதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் முகமது யூனுஸ் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:''நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது. ஹிந்து, கிறிஸ்தவ, பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத மக்களையும் மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் முயற்சியை வீணாக்க பலர் திட்டமிடுகின்றனர். இந்த முறை தோல்வி அடைய வேண்டாம். வங்கதேசத்தை முன்னேற்றுவது மாணவர்களின் கையில் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்'' என்றார்.

