திருமணமான துாதரக அதிகாரியுடன் உறவு; வங்கதேச மாடல் அழகி மேக்னா கைது
திருமணமான துாதரக அதிகாரியுடன் உறவு; வங்கதேச மாடல் அழகி மேக்னா கைது
UPDATED : ஏப் 15, 2025 10:23 AM
ADDED : ஏப் 15, 2025 04:09 AM

டாக்கா : வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாடல் அழகி மேக்னாஆலம், 30. நடிகையான இவர், கடந்த 2020ல் வங்கதேச அழகியாக தேர்வானார். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுதும் ஏற்படுத்தி வந்த இவர், அந்நாட்டின் சமூக ஆர்வலர்களில் ஒருவராக உள்ளார்.
இவருக்கும், வங்கதேசத்துக்கான சவுதி அரேபிய துாதர் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்ததும், அவருடன் பழகியதை மேக்னா நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
பொய்யாக பழகி ஏமாற்றியது தொடர்பாக அவர் மீது புகார் கொடுக்கவும் மேக்னா முயற்சித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தன் சமூக வலைதள பக்கமான பேஸ்புக் பக்கத்தில், தன் வீட்டில் நடப்பதை மேக்னா நேரலை செய்தார்.
தனக்கு சவுதி அரேபிய நாட்டு துாதருடன் காதல் உறவு இருந்தது குறித்தும், அவருக்கு திருமணமான செய்தி அறிந்ததும், அவரை விட்டு விலகியது குறித்தும் அப்போது அவர் விளக்கினார். அந்த திருமணமான அதிகாரி, சட்ட அமலாக்கத்துறை உதவியுடன் தன்னை சமாதானப்படுத்த முயற்சிப்பதாகவும் மேக்னா குற்றஞ்சாட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில் போலீசார் என கூறிக்கொண்டு, தன் வீட்டின் கதவை உடைத்து சிலர் உள்ளே நுழைந்ததாகக் கூறி, அது தொடர்பான காட்சிகளை நேரலையில் காண்பித்தார்.
மொத்தம் 12 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், மேக்னா வீட்டில் போலீசார் நுழைவதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் போலீசார் அவரை கைது செய்து அழைத்து செல்வதும் ஒளிபரப்பானது.