இந்திய பகுதிகளுடன் ரூபாய் நோட்டு: நேபாளம் முடிவால் சர்ச்சை
இந்திய பகுதிகளுடன் ரூபாய் நோட்டு: நேபாளம் முடிவால் சர்ச்சை
ADDED : மே 04, 2024 12:20 PM

காத்மண்டு: உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நமது அண்டை நாடான நேபாளம், சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. உத்தரகண்ட்டின் லிபுலெக், காலாபானி மற்றும் லிமிபியதுரா ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது.
இதனை இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறியது.
இந்நிலையில், இந்த பகுதிகளை கொண்ட வரைபடத்துடன் ரூ.100 நோட்டை அச்சடித்து வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. பிரதமர் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும், புதிய வரைபடத்தை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். நேபாளத்தின் இந்த முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.