டிரம்ப் பேச்சை திரித்த விவகாரத்தில் பி.பி.சி., இயக்குநர் ராஜினாமா
டிரம்ப் பேச்சை திரித்த விவகாரத்தில் பி.பி.சி., இயக்குநர் ராஜினாமா
ADDED : நவ 11, 2025 06:55 AM

நியூயார்க்: அ மெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த புகாரில், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்த 2020ல் நடந்த தேர்தலில், அப்போது அதிபராக இருந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பை டன் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்கவில்லை. இந்நிலையில், 2-021 ஜன.,ல் அவருடைய குடியரசு கட்சியினர், 'கேபிடோல்' எனப்படும் அந்த நாட்டின் பார்லிமென்டுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, டிரம்ப் ஆற்றிய உரையே வன்முறையைத் துாண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அதிபர் பதவிக்கு கடந்தாண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில், டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார்.
அப்போது, டிரம்ப் தொடர்பான ஒரு ஆவண படத்தை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டது.
அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பி.பி.சி., திருத்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான சர்ச்சை வெடித்த நிலையில், பி.பி.சி., நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பி.பி.சி.,யின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு தொகுத்த 19 பக்க அறிக்கையில், ஆவணப் படம் டிரம்ப் கலவரத்தை துாண்டியது போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்த நிலையில், பி.பி.சி., நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார்.

