இலங்கை அரசின் இடையூறு: பி.பி.சி., வானொலி சேவை நிறுத்தம்
இலங்கை அரசின் இடையூறு: பி.பி.சி., வானொலி சேவை நிறுத்தம்
ADDED : மார் 27, 2013 11:43 PM

லண்டன்: இலங்கைக்கான வானொலி பண்பலை சேவையை, பி.பி.சி., நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இது குறித்து, பி.பி.சி., உலக வானொலி சேவையின் இயக்குனர், பீட்டர் ஹோரக்ஸ் கூறியதாவது: இலங்கை அரசின் குறுக்கீட்டால், கடந்த, 15,16 மற்றும், 17ம் தேதிகளின் போது, ஒலிபரப்பான தமிழ் நிகழ்ச்சிகளில், தடங்கல்கள் ஏற்பட்டது. ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த குறுக்கீடுகள் குறித்து, இலங்கை ஒலிபரப்பு நிறுவனத்துக்கு, எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த, 25ம் தேதி, மீண்டும் தமிழ் நிகழ்ச்சியில் தடங்கல் ஏற்பட்டதை அடுத்து, இலங்கைக்கான, பண்பலை சேவை உடனடியாக, நிறுத்தி வைக்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஒலிபரப்பின்போது, இவ்வாறு இடையூறு செய்வதை, ஏற்கமுடியாது. ஒலிபரப்பு நிறுத்தம் தொடர்பாக, இலங்கையில் உள்ள நேயர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். எனினும், இது போன்ற தடங்கல்கள், எங்கள் நிகழ்ச்சிகளின் மீதான நம்பகத் தன்மையை குறைக்கின்றன. இதை பி.பி.சி., அனுமதிக்காது. இவ்வாறு, பீட்டர் கூறினார். எனினும், சிற்றலை மற்றும் இணையதளம் மூலம், இலங்கை நேயர்கள், நிகழ்ச்சிகளை கேட்க முடியும் என, பி.பி.சி., தெரிவித்துள்ளது. கடந்த, 2009ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இலங்கையில் நடந்த போரின் போதும், இதே காரணத்துக்காக, பி.பி.சி., நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
