வெல்லும் வரை ஆதரவு; உக்ரைன் அதிபருக்கு உத்தரவாதம் தந்தது அமெரிக்கா!
வெல்லும் வரை ஆதரவு; உக்ரைன் அதிபருக்கு உத்தரவாதம் தந்தது அமெரிக்கா!
ADDED : செப் 20, 2024 08:28 AM

வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரில் வெற்றி பெறும் வரை ஆதரவு வழங்குவோம் என அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உறுதி அளித்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இது வரை உருப்படியான தீர்வு ஏற்படவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஆதரவு நிச்சயம்
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். இது குறித்து சமூகவலைதளத்தில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், 'அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் செப்., 26ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு உட்பட, போரின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள். துணை அதிபர் கமலா ஹாரிசும் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார். உக்ரைன் வெற்றி பெறும் வரை அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வழங்குவார்கள்' என குறிப்பிட்டுள்ளது.
பைடன் சொல்வது என்ன?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' எனது நண்பர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு விருந்தளிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது வருகையின் போது, உக்ரைனை போரில் இருந்து பாதுகாக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துவேன்' என குறிப்பிட்டுள்ளார்.