ADDED : டிச 18, 2024 12:55 AM

மாஸ்கோ, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டின் அணு ஆயுதப்படை பிரிவின் தளபதி இகோர் கிரில்லோவ், 54, கொல்லப்பட்டார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடிக்கிறது.
இதில், தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை தங்கள் நாட்டின் மீது பயன்படுத்தியதற்காக, உக்ரைனின் உளவுப்பிரிவு நேற்று முன்தினம், ரஷ்யாவின் அணு மற்றும் ரசாயன பாதுகாப்பு படைப் பிரிவின் தளபதி இகோர் கிரில்லோவ் மீது குற்ற விசாரணையை துவங்கியது.
இகோர் கிரில்லோவுக்கு பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் தடை விதித்துள்ளன. இந்நிலையில் கிரில்லோவ், மாஸ்கோவில் உள்ள தன் வீட்டில் இருந்து நேற்று பணிக்கு புறப்பட்டார்.
அப்போது வீட்டுக்கு அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் கிரில்லோவ் மற்றும் அவரது பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த வெடிகுண்டு ரிமோட் வாயிலாக வெடிக்கச் செய்யப்பட்டதாக, ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
குண்டுவெடிப்பில், படை தளபதி கொல்லப்பட்டது குறித்து, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கூறுகையில், ''இது ஒரு பயங்கரவாத செயல். போரில் அடைந்த படுதோல்வியை திசைதிருப்பவே இது போன்ற செயலில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. இதற்கான தண்டனை வழங்கப்படும்,'' என எச்சரித்தார்.
இந்நிலையில், இத்தாக்குதல் உக்ரைனின் உளவு அமைப்பான 'செக்யூரிட்டி சர்வீஸ் ஆப் உக்ரைனால்' திட்டமிடப்பட்ட ஒன்று என, அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.