சீனாவுடனான எல்லை பிரச்னை முக்கால்வாசி தீர்த்தாச்சு : ஜெய்சங்கர்
சீனாவுடனான எல்லை பிரச்னை முக்கால்வாசி தீர்த்தாச்சு : ஜெய்சங்கர்
UPDATED : செப் 12, 2024 06:54 PM
ADDED : செப் 12, 2024 06:43 PM

ஜெனிவா: இந்திய-சீனா எல்லையில் 75 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இந்திய -சீனா இடையே எல்லை 3,500 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இந்தியாவின் திபெத் உள்ளிட சில பகுதிகளை சீனா அவ்வப்போது ஆக்கிரமித்து முகாம் அமைத்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே எல்லை பிரச்னை பல ஆண்டுகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப்பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
பின் ஜெனிவாவில் பாதுகாப்பு கொள்கை தொடர்பான உலகளாவிய மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியது, பக்கத்து நாடான சீனா தன் ராணுவ மயமாக்கலை அதிகரித்து வருதே எல்லை பிரச்னைக்கு முக்கிய காரணம்.
கடந்த 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இரு தரப்பு ராணுவ வீரர்கள் மோதலால் இந்திய -சீன உறவு முழுமையாக பாதித்து விட்டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்கிலும் இரு நாடுகளின் ராணுவங்களும் நிலைநிறுத்தப்பட்டதால், இந்தியா - சீனா உறவு பாதிப்பு தீவிரமாக காணப்பட்டது.
எனினும் 2021ல் இருந்து ராணுவ மட்டத்திலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது 75 சதவீத எல்லை பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜெயசங்கர் விரைவில் சீனா செல்ல உள்ளதாகவும்,அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.