ADDED : பிப் 14, 2025 10:38 AM

வாஷிங்டன்: டாலருக்கு போட்டியாக பொது கரன்சியை உருவாக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பு செத்துப் போய்விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, 'பிரிக்ஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்தோனேசியா, அரபு நாடுகள் சிலவும் இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ளன.
சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என்பது இந்த அமைப்பின் ஆரம்ப கால திட்டங்களில் ஒன்றாக இருந்தது. டாலருக்கு மாற்று உருவாக்கும் முயற்சிக்கு, அமெரிக்கா அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியாவின் பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரை அதிபர் டிரம்ப் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு முன்பாக பிரிக்ஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க நினைத்தால், 100 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும். டாலருடன் விளையாட வேண்டாம்.
இதனை நாங்கள் செய்தே தீருவோம் என்று சொல்லும் நாளில், அவர்கள் (பிரிக்ஸ்) என்னிடம் வந்து கெஞ்சும் நிலை உருவாகும். பிரிக்ஸ் அமைப்பு செத்துப் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார். டிரம்ப்பின் இந்தப் பேச்சு பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்ற நாடுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.