பிரிட்டனில் 2008க்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்கத் தடை
பிரிட்டனில் 2008க்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்கத் தடை
UPDATED : ஏப் 23, 2026 07:02 AM
ADDED : ஏப் 22, 2026 09:17 PM

லண்டன்: ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியாக பிரிட்டன் அரசு, சிகரெட் விற்பனைக்கு எதிராக ஒரு அதிரடி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆண்டுதோறும், 64,000 பேர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களால் உயிரிழக்கின்றனர். புகைப்பிடிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மட்டும் அந்நாட்டு அரசு, ஆண்டுக்கு 30,000 கோடி ருபாய்க்கும் மேல் செலவு செய்கிறது.
இதையடுத்து பிரிட்டன் பார்லிமென்ட்டில் புகையிலை மற்றும் இ-சிகரெட் தடுப்பு மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 2009, ஜன., 1க்குப் பின் பிறந்த எவருக்கும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அடுத்த வாரம் மன்னர் சார்லசின் ஒப்புதலைப் பெற்றவுடன் அதிகாரப்பூர்வ சட்டமாகும். வரும், 2027ம் ஆண்டு முதல் இந்த வயது வரம்பு கட்டுப்பாடுகள் முழுவீச்சில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
