ADDED : ஆக 06, 2024 04:07 PM

லண்டன்: ‛‛ பிரிட்டனில் சில இடங்களில் கலவரம் வெடித்துள்ளதால், அப்பகுதிகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். கவனமுடன் இருக்க வேண்டும் '' என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில், சமீபத்தில் புகுந்த 17 வயது சிறுவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த சிறுமியர் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய சிறுவன், சட்ட விரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர் என்ற வதந்தி சமூக வலைதளத்தில் பரவியது.
இதையடுத்து, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் அங்குள்ள சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனில் சில இடங்களில் நிலவும் கலவரம் குறித்து இந்தியர்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். சூழ்நிலையை, இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், பிரிட்டனில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உள்ளூர் செய்திகளை அறிந்து கொள்வதுடன், போலீசார் விடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும். போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.