அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்காக பாடுபடுகிறார் பிரிட்டன் மன்னர் பாராட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்காக பாடுபடுகிறார் பிரிட்டன் மன்னர் பாராட்டு
UPDATED : செப் 19, 2025 12:49 AM
ADDED : செப் 19, 2025 12:33 AM

லண்டன்: பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது
மனைவிக்கு, வின்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரமாண்ட விருந்து அளித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளனர். இஸ்ரேல் - -காசா போர் மற்றும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக பயணம் செய்துள்ளார்.
அவர்களுக்கு பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் வின்ட்சர் கோட்டையில் டிரம்பிற்கு ஆடம்பர விருந்து அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய டிரம்ப், இது தன் வாழ்க்கையில் கிடைத்த மிக உயர்ந்த கவுரவங்களில் ஒன்று என குறிப்பிட்டார். அதே சமயம், உலகின் மிகவும் தீர்க்க முடியாத சில மோதல்களுக்கு தீர்வுகளைக் கண்டறிவதிலும், அமைதியைப் பாதுகாப்பதிலும் டிரம்புக்கு தனிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ளதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் பாராட்டினார்.