ADDED : ஜன 06, 2024 06:52 PM

துபாய்: உலகின் மிகவும் உயரமான கட்டடம் என கின்னஸ் சாதனையில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் விரைவில் அந்த சாதனையை இழக்க உள்ளது. சவுதியில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்'' கட்டடம் உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை எட்ட உள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. 2004ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி 2010ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி ) இக்கட்டடத்தில் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்'' என்ற கட்டடம் புர்ஜ் கலிபா கட்டடத்தை விட உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை படைக்க உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் துவங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் உயரம் 1000 மீட்டர் ( 3,281 அடி) என கூறப்படுகிறது. இக்கட்டடத்தில் சொகுசு வீடுகள், அலுவலகம், ரெஸ்டாரண்ட்கள், ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டிடம் இருக்கும்.
இதன் மூலம் 14 ஆண்டுகளாக உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிபா இழக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.