லாரி மீது பஸ் மோதி விபத்து: மெக்சிகோவில் 41 பேர் பலி
லாரி மீது பஸ் மோதி விபத்து: மெக்சிகோவில் 41 பேர் பலி
ADDED : பிப் 10, 2025 04:26 AM

மெக்சிகோ சிட்டி; மெக்சிகோவில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 41 பேர் உடல் கருகி பலியாகினர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் குயின்டானோ ரூ மாகாணத்தில் உள்ள கான்கன் நகரில் இருந்து தபாஸ்கோ நகர் நோக்கி, 40க்கும் மேற்பட்ட பயணியருடன் சொகுசு பஸ் நேற்று சென்றது. எஸ்கார்செகா நகரின் அருகே அந்த பஸ் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் அந்த பஸ் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பஸ்சில் இருந்த பயணியரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், தீயை அணைக்க போராடினர்.
தீயணைப்புத் துறையினர், பஸ்சில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். எனினும், பஸ் முழுதும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்தில், பஸ் மற்றும் லாரி டிரைவர்கள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், மரபணு சோதனை நடத்தி, உடல்களை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

