காலிஸ்தான் அமைப்புகளுக்கு நிதியுதவி தாராளமாக கிடைப்பதாக கனடா ஒப்புதல்
காலிஸ்தான் அமைப்புகளுக்கு நிதியுதவி தாராளமாக கிடைப்பதாக கனடா ஒப்புதல்
ADDED : செப் 07, 2025 01:01 AM
ஒட்டாவா:கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு தாராளமாக நிதியுதவி கிடைத்து வருவதை, கனடா அரசு முதல் முறை யாக ஒப்புக் கொண்டுள்ளது.
பஞ்சாபை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு போராடி வந்தது. இந்தியாவில் இந்த அமைப்பு ஒடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இதற்கு ஆதரவாக வட அமெரிக்க நாடான கனடா உட்பட பல நாடுகளில், பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கனடாவில், காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கோலோச்சி வருகின்றன.
நிதி திரட்டல் இது குறித்து மத்திய அரசு பலமுறை எச்சரித்தும், அதை கனடா அரசு மறுத்து வந்துள்ளது. அதே நேரத்தில் மறைமுறைமாக இந்த அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள், கனடாவில் உள்ள இந்தியத் துாதரகம், கோவில்கள் உள்ளிட்டவற்றில் தாக்குதல்களையும் நடத்தி வந்தன.
இந்நிலையில், கனடா அரசின் நிதித்துறை 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. 'பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்கள் பற்றிய மதிப்பீடு' என்ற தலைப்பில் பயங்கரவாத குழுக்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பது குறித்து அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியல் ரீதியாக வன்முறையை துாண்டுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்கள் கனடாவிற்குள்ளேயே நிதியுதவி பெற்று வருகின்றன. இக்குழுக்கள் முக்கியமாக இந்தியாவில் வன்முறையை ஊக்குவிக்கவும், திட்டமிடவும் அதற்காக நிதி திரட்டவும் கனடாவை ஒரு தளமாக பயன்படுத்துகின்றன.
தொடர்பு பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்ற காலிஸ்தான் பயங்கரவாதக் குழுக்கள் மிகவும் வெளிப்படையாக கனடாவில் இயங்கி வருகின்றன. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளான ஹமாஸ், ஹெஸ்பொல்லா போன்றவற்றுடனும் இந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது.
அவற்றின் உதவியோடு, கனடாவின் நிதி வலையமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்களை தங்கள் தீவிரவாத செயல்களுக்கு, காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.