பாதுகாப்பு தர கனடா மறுப்பு: தூதரக நிகழ்ச்சிகளை ரத்து செய்தது இந்தியா
பாதுகாப்பு தர கனடா மறுப்பு: தூதரக நிகழ்ச்சிகளை ரத்து செய்தது இந்தியா
UPDATED : நவ 07, 2024 03:39 PM
ADDED : நவ 07, 2024 03:37 PM

ஒட்டாவா: குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தர முடியாது என கனடா பாதுகாப்பு படையினர் கூறியதை தொடர்ந்து, தூதரகம் சார்பில் ஏற்பட்ட சில முகாம்களை இந்தியா ரத்து செய்துவிட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை தொடர்பான விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிராம்ப்டன் நகரில் ஹிந்து சபை கோயில் பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கோயிலில் இருந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து தாக்குதல் நடத்தினர். இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், டொரன்டோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் முகாம்கள் நடத்த இந்தியா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முகாம்களுக்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பை கூட வழங்க முடியாது என கனடா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து இந்த முகாம்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அர்ச்சகர் சஸ்பெண்ட்
இந்நிலையில், பிராம்ப்டன் நகரில் கடந்த 3ம் தேதி கோயில் முன்பு மோதலின் போது வன்முறையை தூண்டியதாக அக்கோயில் அர்ச்சகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.