ADDED : நவ 09, 2024 06:23 PM

ஒட்டாவா: சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த ' student direct scheme' என்ற விசா திட்டத்தை கனடா அரசு நிறுத்தி உள்ளது.
இந்தியா,பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்லைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில விரைவாக விசா வழங்கும் பொருட்டு இந்த திட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியது.
வழக்கமான விசா வழங்க பல மாதங்கள் ஆகும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விரைவாக விசா வழங்கப்பட்டு வந்தது. பல நாடுகளில் இருந்து அங்கு வந்த நிலையில், கனடாவில் வீடு பிரச்னை, செலவு, சுகாதார பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து சர்வதேச மாணவர்களை கட்டுப்படுத்த அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த மாணவர் விசா திட்டத்தை ரத்து செய்வதாக அந்நாடு அறிவித்து உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்க விசா பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.