இந்தியா செல்வோருக்கு பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கியது கனடா!
இந்தியா செல்வோருக்கு பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கியது கனடா!
UPDATED : நவ 20, 2024 10:16 PM
ADDED : நவ 20, 2024 05:41 PM

ஒட்டாவா: கனடாவில் இருந்து இந்தியா செல்வோருக்கான பாதுகாப்பு விதிமுறைகளை அந்நாட்டு அரசு கடுமையாக்கி உள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு தொடர்பாக இந்தியா- கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டிற்கான தூதரை திரும்ப பெற்றுக் கொண்ட இந்தியா, டில்லியில் இருந்தும் கனடா தூதரை வெளியேற்றி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு ஒவ்வொரு நாளும் மோசம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், அந்த நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது: கனடாவில் இருந்து இந்தியா செல்வோருக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் தற்காலிகமாக கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவை மிகவும் எச்சரிக்கையுடன் எடுத்துள்ளோம். இதனால் உடமைகளை சோதனை செய்வதில் பயணிகளின் சற்று தாமதத்தை சந்திக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
அந்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கனடா வான் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமே, இந்த கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளையும் செய்யும் என கனடா அரசு கூறியுள்ளது.
இதனையடுத்து ஏர் கனடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சோதனை நிறைவு பெற நேரம் அதிகமாகும். பயணத்தில் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க, பயணிகள் அனைவரும் விமானம் கிளம்புவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு வர வேண்டும்'', எனக் கூறப்பட்டு உள்ளது.