கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு
கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு
UPDATED : அக் 17, 2024 07:18 AM
ADDED : அக் 17, 2024 03:14 AM

ஒட்டாவா: கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இங்குள்ள காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்படுவதாகவும் கனடாவின் உளவுத்துறை இயக்குனர் வனீசா லாயட் பேசியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கனடாவில் வசித்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது, இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக, கனடா கடந்த ஓராண்டாகவே குற்றஞ்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற சமூக விரோத கும்பல்களின் உதவியுடன், கனடாவில் வன்முறைகளை இந்தியா கட்டவிழ்த்து விடுவதாகவும், பல கொலைகளை அரங்கேற்றி வருவதாகவும், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி சமீபத்தில் தெரிவித்தார்.
இது, இருநாட்டு உறவை மேலும் சீர்குலைத்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியதுடன், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மாவை நம் அரசு திரும்பப் பெற்றது.
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆறு இந்திய ஏஜென்ட்களை கனடாவில் இருந்து வெளியேறும்படி அந்நாடு உத்தரவிட்டது; அவர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழையவும் தடை விதித்தது.
இதற்கிடையே, கனடாவின் உளவு அமைப்பான கனடா செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ் சர்வீசின் இயக்குனர் வனீசா லாயிட் கடந்த மாதம் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம்:
கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மதிப்பை குறைக்கும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள காலிஸ்தானியர்களுக்கு அவர்கள் நேரடியாக ஆதரவு அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நேரத்தில், வனீசாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.