பாக்.,கில் கார் குண்டு வெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு
பாக்.,கில் கார் குண்டு வெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 01, 2025 07:43 AM

பலுசிஸ்தான்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுச் விடுதலைப் படையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அடிக்கடி கிளர்ச்சியில் ஈடுபடுவதுடன் ராணுவத்தினர் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், பாக்., ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய அவர்கள், பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவை, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அந்த நகரில் உள்ள, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு அருகே நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
வெடிச்சத்தம் மிகவும் தீவிரமாக இருந்ததாகவும், அது பல கி.மீ., துாரத்துக்கு கேட்டதாகவும் தெரிகிறது.
இந்த குண்டு வெடிப்பால், அருகில் இருந்த வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறின. குண்டு வெடித்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனை யில் அனுமதித்தனர்.
அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தானில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகள் மீது சந்தேகம் விழுந்துள்ளது. சுற்றியுள்ள பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொ டங்கியுள்ளனர்.