குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு
குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்ல சதி; 'ரா' முன்னாள் அதிகாரி மீது வழக்கு பதிவு
ADDED : அக் 19, 2024 07:21 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, இந்திய உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, 'சீக்கியருக்கான நீதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக, காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுான் உள்ளார். அமெரிக்காவில் வைத்து இவரை கொலை செய்ய, இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியது. இதை நம் நாடு திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியர் நிகில் குப்தா என்பவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். பின் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, 'ரா' எனப்படும், நம் நாட்டின் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ், 39, மீது அமெரிக்க அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. கூலிப்படையை ஏவுதல், பண மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பன்னுானை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் விகாஷ் யாதவ் இருந்தார் என்றும், இந்த கொலையை செயல்படுத்த, நிகில் குப்தா என்பவரை அவர் நியமித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்த மத்திய அரசு, விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.