தீபாவளியை அனைவரும் கொண்டாடுங்க: மக்களுக்கு சிங்கப்பூர் அமைச்சர் அழைப்பு!
தீபாவளியை அனைவரும் கொண்டாடுங்க: மக்களுக்கு சிங்கப்பூர் அமைச்சர் அழைப்பு!
ADDED : செப் 16, 2024 07:07 PM

சிங்கப்பூர்: 'ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில், தீபாவளியை அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து கொண்டாட வேண்டும்' என்று, சிங்கப்பூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டியோ சீ ஹீன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியினர், குறிப்பாக தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இங்கு செப்.,14 முதல் நவ.,17 வரை, 'தீப் மாலா' என்ற பெயரில் தீபாவளி கொண்டாட்டம் நடக்கிறது. இதன் துவக்க விழாவில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹீன் பேசியதாவது:இருளை ஒளி வெற்றி கொண்டதன் அடையாளமே தீபாவளி. அது ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான செய்தியை சொல்கிறது.
அந்த பண்டிகையை கொண்டாடுவதன் மூலம், இனம், மதம், கலாசார அடையாளங்களை கடந்த பிணைப்பு, மக்களுக்குள் ஏற்படும்; நல்ல புரிந்துணர்வும், மரியாதையும் உருவாகும்.இந்த வேண்டுகோளை சிங்கப்பூர் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்று நம்புகிறேன்..இவ்வாறு அமைச்சர் டியோ சீ ஹீன் பேசினார்.
பல்வேறு மதங்களை சேர்ந்தோர் வசிக்கும் சிங்கப்பூரில், அனைத்து மத திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு, சிங்கப்பூர் அரசும், லிட்டில் இந்தியா வணிகர்கள் மற்றும் கலாசார அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

