ஹிந்தி படத்தை எதிர்த்து ரக ளை: பிரிட்டனுக்கு மத்திய அரசு கண்டிப்பு
ஹிந்தி படத்தை எதிர்த்து ரக ளை: பிரிட்டனுக்கு மத்திய அரசு கண்டிப்பு
ADDED : ஜன 24, 2025 11:41 PM

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், நடிகை கங்கனா ரணாவத் நடித்த எமர்ஜென்சி திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு, பிரிட்டன் அரசிடம் மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பா.ஜ., - எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத் நடிப்பில் எமர்ஜென்சி ஹிந்தி திரைப்படம் கடந்த 17ல் உலகம் முழுதும் வெளியானது.
கடந்த 1975ல், அப்போதைய பிரதமர் இந்திரா கொண்டு வந்த அவசரநிலை காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டுஉள்ளன.
இந்த படம் சீக்கியர்களுக்கு எதிரானது என இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தணிக்கை பிரிவினர் சில காட்சிகளை நீக்கிய பின், கடந்த 17ல் திரைப்படம் வெளியானது.
பிரிட்டனின் வால்வர்ஹாம்ப்டன், பிர்மிங்காம், மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டபோது, காலிஸ்தான் பயங்கரவாதிகள் தியேட்டருக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதுடன், அடுத்தடுத்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எமர்ஜென்சி திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் புகுந்து கொடூர வன்முறையிலும், மிரட்டலிலும் ஈடுபட்டுள்ளதை அறிந்தோம். இது தொடர்பாக எங்கள் கவலையை பிரிட்டன் அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் பொருந்துவதாக இருக்க முடியாது. திரைப்படம் திரையிடுவதற்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.