சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 08:20 PM

ஜெருசலேம்: சிரியாவில் இருந்த ரசாயன ஆயுதங்களையும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சி வீழ்ச்சி அடைந்து, கிளர்ச்சிப்படையினர் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த கிளர்ச்சிப்படையினரில் பலர், ஏற்கனவே செயல்பட்டு வந்த அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளில் இருந்தவர்கள்.
அவர்களது கையில் ரசாயன ஆயுதங்கள், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, இஸ்ரேல் தீவிரமாக கண்காணித்து வந்தது.
சிரியாவின் குறிப்பிட்ட ஆயுதக்கூடத்தில் இந்த ஆயுதங்கள் இருப்பதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், அந்த இடத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி தரை மட்டம் ஆக்கியது. வரும் நாட்களிலும் தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:சிரியாவின் அதிநவீன ஆயுத கிடங்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை, முடுக்கி விட்டுள்ளோம். அதிபர் பஷார் அல்- ஆசாத்தின் வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கும் வகையில், சிரியாவில் எங்களது படைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
அல் கொய்தாவின் சித்தாந்தத்தில் வேரூன்றிய கிளர்ச்சிப் படைகளின் முன்னேற்றம் ஆபத்தானது. அதை கருத்தில் கொண்டு வரும் நாட்களிலும் வான்வழித் தாக்குதல்கள் தொடரும்.
இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ' வான் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், மேற்பரப்பு ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள், நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் கடலோர ஏவுகணைகள் உட்பட சிரியா முழுவதும் உள்ள ஏவுகணைகளை அழித்துவிடுவோம்,'' என்றார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன்சார் கூறுகையில், ''சிரிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களது குடிமக்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறோம். எந்த ஆயுதங்களும் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்துவிடக்கூடாது என்பதால் எஞ்சியிருக்கும் ரசாயன ஆயுதங்கள் அல்லது நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் போன்ற அனைத்து ஆயுத அமைப்புகளை நாங்கள் தாக்குகிறோம். இது தற்காலிக நடவடிக்கை தான்,'' என்றார்.