பழிக்கு பழி வாங்க செஸ் போர்டில் விஷம்: எதிராளியை வீழ்த்த ரஷ்ய வீராங்கனை செய்த கொடூர சதி
பழிக்கு பழி வாங்க செஸ் போர்டில் விஷம்: எதிராளியை வீழ்த்த ரஷ்ய வீராங்கனை செய்த கொடூர சதி
ADDED : ஆக 09, 2024 01:29 PM

மாஸ்கோ: குழந்தை பருவம் முதல் தனக்கு போட்டியாளராக விளங்கிய செஸ் வீராங்கனையால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்க, செஸ் போர்டில் விஷம் தடவிய ரஷ்யாவைச் சேர்ந்த வீராங்கனையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவின் தாகெஸ்தானின் மகாசக்லா நகரில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் அமினா அபகரோவா (40) என்ற பெண் வீராங்கனை, குழந்தைப்பருவம் முதல் போட்டியாளராக விளங்கும் உமைகனாட் ஒஸ்மானோவோ என்பவரை எதிர்கொண்டார்.
நல்ல உடல்திறனுடன் விளையாடிய, உமைகனாட் ஒஸ்மானோவோவுக்கு சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது நடுவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசில் புகார் அளித்தார். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது.
அதில், அமினா அபகரோவா செஸ் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று, உமைகனாட் ஒஸ்மானோவன் அமரும் இடத்தில் ஏதோ ஒனறை தடவுகிறார். யாரும் கவனிக்கும் முன்னர் அந்த இடத்தை காலி செய்கிறார். இந்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
செஸ்போர்ட், செஸ் காயினை ஆய்வு செய்ததில், பாதரசம் தடவப்பட்டு இருப்பதும், அதனால், உமைகனாட் ஒஸ்மானோவோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் தெரிந்தது. அமினா அபகரோவாவை போலீசார் கைது செய்தனர். உமைகனாட் ஒஸ்மானோவோவினால் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் வகையில் பாதரசத்தை தடவியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமினா அபகரோவா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் செஸ் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.