UPDATED : செப் 05, 2025 09:33 PM
ADDED : செப் 05, 2025 03:55 PM

லண்டன்: ஆக்ஸ்போர்டில் உள்ள ஜியு போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முதல்வர் உள்ளார். ஆக்ஸ்போர்டு நகரில் ஜி.யு.போப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜி.யு.போப்!
19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!ஆக்ஸ்போர்ட் அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?அங்குள்ள ஜியு போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜி யு போப் இந்தியாவுக்கு மதம் பரப்புவதற்காக வந்தவர் என்று குற்றச்சாட்டு உண்டு. மக்களிடம் தனது மதத்தை கொண்டு சேர்ப்பதற்காகவே அவர் தமிழை கற்றுக் கொண்டார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் உள்ளன. அவர் எழுதிய புத்தகங்கள் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாகின என்பது குறிப்பிடத்தக்கது.