வீரர்களை திரும்ப பெறும் பணி சுமுகமாக நடப்பதாக சீனா கருத்து
வீரர்களை திரும்ப பெறும் பணி சுமுகமாக நடப்பதாக சீனா கருத்து
ADDED : அக் 27, 2024 05:36 AM

பீஜிங்: இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், வீரர்களை வாபஸ் பெறும் பணி சுமுகமாக நடந்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. கடந்த 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே மோதல் வெடித்தது. இதில், இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்களில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக, துாதரக ரீதியாகவும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் இரு நாடுகளிடையே பலகட்ட சுற்று பேச்சுகள் நடந்தன. டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், 2020க்கு முந்தைய நிலை தொடர இரு நாடுகளும் சமீபத்தில் ஒப்புக் கொண்டன.
இதையடுத்து, டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், இருதரப்பு ராணுவத்தினரும் வீரர்களை வாபஸ் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணி, இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ''இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இந்த பணி சுமுகமாக நடக்கிறது,'' என்றார்.
டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில், சீன வீரர்கள் வாபஸ் பெறப்பட்ட பின் எடுக்கப்பட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
டெப்சாங்கில், அக்., 11ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சீன ராணுவத்தின் நான்கு வாகனங்கள், இரு தற்காலிக கூடாரங்கள் இருப்பது தெரிகிறது. நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் புகைப்படங்களில், கூடாரங்கள், வாகனங்கள் அகற்றப்பட்டிருப்பது தெரிகிறது.