அதிகார அரசியலை எதிர்க்க முன்வர வேண்டும்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு
அதிகார அரசியலை எதிர்க்க முன்வர வேண்டும்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு
ADDED : மார் 07, 2025 10:26 PM

பீஜிங்: '' உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும்,'' என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.
பீஜிங்கில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரஷ்யாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளது. இரண்டு பண்டைய நாகரிகங்களாக உள்ள நாடுகள், எல்லை பிரச்னைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை எல்லை பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு போதுமான ஞானமும் திறனும் இந்தியா, சீனாவிடம் உள்ளது.
எல்லைப் பிரச்னை அல்லது குறிப்பிட்ட கருத்து வேறுபாடுகளால் இரு தரப்பு உறவுகள் வரையறுக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. அவை நமது இரு தரப்பு உறவுகளை பாதிக்கிறது. மிகப்பெரிய அண்டை நாடுகளாக, இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் வெற்றியில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என சீனா நம்புகிறது.
உலகின் தெற்கு பகுதியில் முக்கியமான நாடுகளாக உள்ள இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நாம் ஒருவரை ஒருவர் குறை மதிப்பிற்கு உட்படுத்துவதையோ அல்லது குறைத்து மதிப்பிடுவதையோ விட ஒருவருக்கு ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க ஒவ்வொரு காரணம் உள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.