விண்ணில் செலுத்திய ராக்கெட் பூஸ்டர் மறுபயன்பாட்டுக்காக மீட்டது சீனா
விண்ணில் செலுத்திய ராக்கெட் பூஸ்டர் மறுபயன்பாட்டுக்காக மீட்டது சீனா
ADDED : ஜூலை 10, 2026 09:08 PM

பீஜிங்: அமெரிக்காவின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தை தொடர்ந்து, விண்வெளிக்கு சென்று திரும்பிய ராக்கெட்டின் பூஸ்டரை மறுபயன்பாட்டுக்காக பத்திரமாக மீட்டு சீனா சாதனை படைத்துள்ளது.
நம் அண்டை நாடான சீனா, ஹைனானில் உள்ள வென்சாங் வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, 'லாங் மார்ச் 10பி' என்ற ராக்கெட்டை விண்ணில் நேற்று ஏவியது. இதன்பின், கீழே விழுந்த பூஸ்டரை பத்திரமாக சீனா மீட்டது. பொதுவாக, ராக்கெட் விண்வெளியை நோக்கி செல்லும் போது, அதன் அடிப்பகுதியான பூஸ்டர் தான் அதற்கு தேவையான, 70 சதவீத ஆற்றலை கொடுத்து மேலே செல்ல உதவும்.
குறிப்பிட்ட உயரத்துக்கு ராக்கெட் சென்றதும், இந்த பூஸ்டர் தனியாக பிரிந்து கீழே விழும். வழக்கமாக கடலில் விழுந்து வீணாகும் இந்த பூஸ்டரை, தொழில்நுட்ப உதவியோடு சீனா பத்திரமாக எந்த சேதமுமில்லாமல் மீட்டுள்ளது. இந்த பூஸ்டரை பழுதுபார்த்து இந்தாண்டு இறுதியில் மீண்டும் பயன்படுத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் 9' மற்றும் 'அமேசான்' நிறுவனரான ஜெப் பெசோசின், 'ப்ளூ ஆர்ஜின்' நிறுவனத்தின், 'நியூ குளோன்' ஆகியவற்றை தொடர்ந்து, இந்த சாதனையை சீனா படைத்துள்ளது. ஆனால், சீனா பயன்படுத்திய தொழில்நுட்பம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
