ஈரான் முடிவில் தலையிடும் இஸ்ரேல் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு
ஈரான் முடிவில் தலையிடும் இஸ்ரேல் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு
ADDED : மார் 10, 2026 03:06 AM

பீஜிங்: ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று இஸ்ரேலுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் உச்சத் தலைவராக, மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரானுக்கு யார் தலைவராக வந்தாலும் அவர்கள் நிச்சயம் கொல்லப்படுவர் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளதாவது:
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை எந்த வகையிலும் குறி வைப்பதை சீனா எதிர்க்கிறது.
ஈரானின் தலைமை மாற்றம், அந்த நா ட்டின் உள்நாட்டு விவகாரம். இது ஈரானின் அரசியலமைப்பு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. எந்தக் காரணங்களை காட்டியும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீன அதிபர் ஷீ ஜின்பிங் எதிர்க்கிறார்.
ஈரானின் இறையாண் மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், சீனாவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேற்காசியாவில் நடக்கும் பிரச்னைகளை அந்நாடுகளே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியிலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை சீனா வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

