வர்த்தக போர் எதிரொலி: சந்திப்பிற்கு விரும்பும் சீனா: சொல்கிறார் டிரம்ப்
வர்த்தக போர் எதிரொலி: சந்திப்பிற்கு விரும்பும் சீனா: சொல்கிறார் டிரம்ப்
UPDATED : ஏப் 18, 2025 09:35 AM
ADDED : ஏப் 17, 2025 10:05 PM

வாஷிங்டன்: வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில் சீனா தன்னை சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து சீனா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. அதேநேரத்தில் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என சீனா கூறியது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெக்சிகோ அதிபருடன் நேற்று நடந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. அதேபோல், ஜப்பான் வர்த்தக பிரதிநிதிகளை நான் சந்தித்தேன். இதுவும் பயனுள்ளதாக இருந்தது. சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் என்னை சந்திக்க விரும்புகின்றன. இன்று இத்தாலி. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.