சீனா பிஎச்.டி., படிக்க உள்ள முதல் மனித உருவ 'ரோபோ'
சீனா பிஎச்.டி., படிக்க உள்ள முதல் மனித உருவ 'ரோபோ'
ADDED : ஆக 06, 2025 01:56 AM

ஷாங்காய்: சீனாவில் மனித உருவ 'ரோபோ' ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான, பிஎச்.டி., படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் ரோபோக்களை உருவாக்கி அதில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை புகுத்தி, கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் தியேட்டர் அகாடமியில், மனித உருவிலான ரோபோ ஒன்று, அந்த நாட்டின் பாரம்பரிய நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ., கலைஞர் என்று வர்ணிக்கப்படும், 'எக்ஸ்யூபா -01' என்ற அந்த ரோபோ, அழகான ஆணின் தோற்றத்தில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஷாங்காய் கலைஞரான பேராசிரியர் யாங் கிங்கிங்கின் வழிகாட்டுதலின் கீழ், செப்டம்பர் 14ல் இந்த ரோபோ தன் கல்விப் பயணத்தைத் துவங்குகிறது.
மேடை நிகழ்ச்சி, திரைக்கதை எழுதுதல், மொழி உருவாக்கம் உட்பட பல்வேறு பாடத்திட்டங்களை ரோபோ கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.