மூளையை கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும்; சீன விஞ்ஞானிகள் புது முயற்சி
மூளையை கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும்; சீன விஞ்ஞானிகள் புது முயற்சி
ADDED : ஜூலை 13, 2025 08:02 AM

பீஜிங்: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளியாகவும் பயன்படுத்த முடியும்.
உயிரினங்களை கருவிகள் வாயிலாக கட்டுப்படுத்தும், 'சைபோர்க்' என்ற தொழில்நுட்பம் தொடர்பாக பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த வகையில், தேனீயின் மூளையை கட்டுப்படுத்தி, நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பு
இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தை தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன. பேரிடர் காலங்களில் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின்போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு இதுபோன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கருவி
இருப்பினும் இந்த கருவி, தொடர்ந்து செயல்படுவதற்கு மின்சார வசதி தேவை. அதனால், கருவியுடன் பேட்டரியை இணைப்பது தொடர்பாக, தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில், ராணுவ உளவுப் பணிகளுக்கும் இதுபோன்ற தேனீக்களை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
