அடுத்த தலைவரை தேடுது ஹமாஸ் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
அடுத்த தலைவரை தேடுது ஹமாஸ் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
ADDED : அக் 19, 2024 03:07 AM

காசா: இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு அக். 07-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், அக்16ம் தேதி, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபா மாவட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வார், 61, கொல்லப்பட்டார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது.
யஹ்யா சின்வரை இழந்துவிட்டாலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று ஹமாஸ் உறுதியேற்றுள்ளது. இதையடுத்து அடுத்த தலைவரை நியமிக்கும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
இதன்படி கத்தாரில் இருக்கும் ஹய்யா என்பவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்தை நடத்துவது சரியாக இருக்காது யுத்த களத்தில் இருந்து செயல்படுபவரே அடுத்த தலைவராக வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கொல்லப்பட்ட யஹ்யா சின்வரின் இளைய சகோதரர் முகம்மது சின்வரை அடுத்த ஹமாஸ் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தவிர மேலும் சிலரின் பெயரும் பட்டியலில் இருப்பதால் விரைவில் ஹமாஸ் தலைவர் பெயர் அறிவிக்கப்படலாம்.