2026 ல் இந்தியா பாக்., இடையே மோதல் ஏற்படலாம்: அமெரிக்க தொண்டு நிறுவனம் கணிப்பு
2026 ல் இந்தியா பாக்., இடையே மோதல் ஏற்படலாம்: அமெரிக்க தொண்டு நிறுவனம் கணிப்பு
ADDED : டிச 30, 2025 10:26 PM

வாஷிங்டன்: 2026ம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படலாம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியதைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலில் அந்நாட்டின் விமானப்படை தளங்கள் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. மேலும் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி வருவதை நமது உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து ஆய்வு செய்யும் Council on Foreign Relations என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, 2026ம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஆயுத மோதலாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே ஆயுத மோதல் ஏற்படலாம். இது அமெரிக்காவின் நலனுக்கு மிதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். டிரம்ப்பின் நிர்வாகம், காங்கோ, காசா, உக்ரைன் மோதலுடன் இந்தியா பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து கம்போடியா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்துள்ளது.
2026ம் ஆண்டு, எல்லை தாண்டிய தாக்குதல் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், அமெரிக்காவின் நலனுக்கு பெரியளவில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

