நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை
UPDATED : ஜூலை 02, 2025 05:10 PM
ADDED : ஜூலை 02, 2025 03:08 PM

டாக்கா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அவரை நாடு கடத்தும்படி முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக கடந்த ஏப்., 30ம் தேதி அரசு வழக்கறிஞர் சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்கு என அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பினை முகமது கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா பதவி விலகி 11 மாதங்கள் முடிந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுவாகும்.