தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள்: கனடாவில் இந்திய திரைப்படங்கள் நிறுத்தம்
தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள்: கனடாவில் இந்திய திரைப்படங்கள் நிறுத்தம்
ADDED : அக் 03, 2025 10:13 PM

டொரன்டோ : கனடாவில், இந்தியர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்குள்ள திரையரங்குகள் இந்திய திரைப்படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்ப கட்டண உயர்வால் பாதிக்கப்படும் திறன்மிக்க இந்திய ஊழியர்களை வரவேற்போம் என்று வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இது அந்நாட்டில் ஒரு சில தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்களை எழுதி வருகின்றனர். இதேபோன்று ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளன.அதன் ஒருபகுதியாக, ஒன்டாரியோ மாகாணத்தில் இந்திய திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கு ஒரே வாரத்திற்குள் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
கடந்த, செப்., 25ல் இரண்டு மர்மநபர்கள் திரையரங்கின் நுழைவாயிலுக்கு தீ வைக்க முயன்றனர். அந்த நேரத்தில் திரையரங்கு மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, நேற்று சந்தேக நபர் ஒருவர், தியேட்டரின் நுழைவாயில் கதவுகள் வழியாக பலமுறை துப்பாக்கியால் சுட்டார்.இரண்டு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில், பொதுமக்களின் உதவியைக் கேட்டு, மர்மநபர்கள் தொடர்பான அடையாளங்களையும், சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்தத் தொடர் தாக்குதல்களால், இந்திய திரைப்படங்கள் திரையிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.