10% கூடுதல் சுங்க வரி விதிப்பு வழக்கு டிரம்புக்கு நீதிமன்றம் மீண்டும் 'குட்டு'
10% கூடுதல் சுங்க வரி விதிப்பு வழக்கு டிரம்புக்கு நீதிமன்றம் மீண்டும் 'குட்டு'
UPDATED : மே 08, 2026 06:39 PM
ADDED : மே 08, 2026 06:20 PM
வாஷிங்டன்: 'உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த, 10 சதவீத வர்த்தக வரிகள் சட்ட விரோதமானவை' எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், வரி விதிப்பையும் ரத்து செய்தது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி உலக நாடுகள் மீது சுங்க வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்க வர்த்தக நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின. இதை எதிர்த்து, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களைச் சேர்ந்த அரசுகளும், வர்த்தகர்களும் இணைந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிபருக்கு நேரடியாக வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்றும், வரி விதிக்க பார்லிமென்டின் ஒப்புதல் தேவை என்றும் கூறி, சுங்க வரியை கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது. இதை ஏற்க மறுத்த டிரம்ப், மீண்டும் மற்றொரு சட்ட விதிகளை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு, 10 சதவீத கூடுதல் வரியை விதித்தார்.
இதை எதிர்த்து, வாஷிங்டன் மாகாணம், 'பர்லாம் அண்டு பேரல்' என்ற மசாலா நிறுவனம், 'பேசிக் பன்' என்ற பொம்பை நிறுவனம் உள்ளிட்டவை நியூயார்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பு:
டிரம்ப் விதித்த, 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு ரத்த செய்யப்படுகிறது. பார்லி., ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்பட்டிருப்பதால் இது செல்லாது. இந்த தீர்ப்பு, வழக்கு தொடர்ந்த மூன்று தரப்பினருக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் மட்டுமே தாங்கள் செலுத்திய வரியை வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வரை இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
