சிரியா அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் கூட்டம்; பொருட்களை அள்ளிச் சென்றனர்
சிரியா அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் கூட்டம்; பொருட்களை அள்ளிச் சென்றனர்
UPDATED : டிச 08, 2024 10:34 PM
ADDED : டிச 08, 2024 03:33 PM

டமாஸ்கஸ்: சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில், அவரது மாளிகைக்குள் நுழைந்த மக்கள், கைகளில் சிக்கிய பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்துள்ளது.
டமாஸ்கஸ் நகரில் இருந்த ஆசாத்தின் தந்தை சிலைகளை கிளர்ச்சியாளர்கள் அடித்து நொறுக்கினர்.
மத்திய கிழக்கு ஆசிய நாடான சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. அதிபராக இருந்த பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி வந்தனர். துருக்கி ராணுவத்தினர் உதவியுடன் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று தலைநகர் டமாஸ்கசையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து, பஷர் அல் ஆசாத் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.இதையறிந்த அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அம்மாளிகையில் ஏராளமான அறைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
சிலைகளை நொறுக்கிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் முன்னாள் அதிபரும், பஷர் அல் ஆசாத்தின் தந்தையுமான ஹபீஸ் அல் ஆசாத் சிலை தலைநகர் டமாஸ்கஸ் நகரில் பல இடங்களில் இருந்தது. இந்நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி முன்னேறிய நிலையில், சிலைகள் அனைத்தையும் நொறுக்கி சாலைகளில் வீசினர். மேலும் அந்த உடைக்கப்பட்ட சிலையின் பாகங்களை சாலையில் போட்டு இழுத்துச் சென்றனர். ஹபீஸ் அல் ஆசாத், 1970ல் புரட்சி மூலம் சிரியா ஆட்சியை கைப்பற்றிய நிலையில் 2000ம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை நாட்டின் அதிபர் ஆக இருந்தார்.
கைதிகள் விடுதலை
டமாஸ்கஸ் நகருக்குள் வந்த கிளர்ச்சியாளர்கள், அங்கு உள்ள செட்னாயா சிறையில் இருந்து கைதிகளை விடுவித்தனர். இவர்கள் அனைவரும் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியவர்கள் எனக்கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்தனர். அங்கு இருந்த ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படங்களை வீசி ஏறிந்து சேதப்படுத்தினர்.
ஊரடங்கு
டமாஸ்கஸ் நகரில் உள்ள சிரியாவின் ரிசர்வ் வங்கிக்குள் புகுந்த ஏராளமானோர் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.