ADDED : மார் 23, 2026 02:38 AM
ஹவானா: தென் அமெரிக்க நாடான கியூபாவில் மூன்றாவது முறையாக நேற்று நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது.
கியூபாவின் மின்சார அமைப்பு பழைய உட்கட்டமைப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அமெரிக்காவின் எரிசக்தி தடைகள் மற்றும் எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட எச்சரிக்கை ஆகியவை, எரிபொருள் வினியோகத்தை குறைத்தது.
கியூபாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்து சீர்திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே தடைகள் நீக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுவரை அதன் நட்பு நாடான வெனிசுலா எண்ணெய் வழங்கி வந்தது. அதன் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பின், அதுவும் நின்று போனது. இது கியூபாவின் எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கியூபாவில் இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக நேற்று நாடு முழுதும் மின் வினியோக அமைப்பு செயலிழந்தது. நாடு முழுதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் கூட நடக்கவில்லை.
