UPDATED : டிச 28, 2024 07:05 AM
ADDED : டிச 28, 2024 06:57 AM

பீஜிங்: 'திபெத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது' என, சீனா விளக்கமளித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், யார்லாங் ஜாங்க்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த அந்த நாடு முடிவு செய்துள்ளது. உலகின் மிக பிரமாண்டமான நீர்மின் உற்பத்தி செய்யும் அணையாக இது விளங்கும் என கூறப்படுகிறது. இந்த நதி, திபெத்தில் இருந்து நம் நாட்டின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்கள் வழியாக வங்கதேசத்துக்குள் பாய்கிறது. இங்கு, பிரம்மபுத்ரா என அது அழைக்கப்படுகிறது.
இமயமலை பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்டப்படுவதால் இந்தியா மற்றும் வங்கதேசம் கவலையடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், பிரம்மபுத்ரா மீது நம் நாடும் புதிய அணையை கட்டி வருவதால், சீனாவின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய அணையால், நம் நாட்டிற்கு வரும் ஆற்றின் நீர் கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது மட்டுமின்றி, கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாக, எதிர்காலத்தில் அணையை சீனா திறக்க நேரிட்டால், இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதிய அணை கட்டும் திட்டத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என சீனா விளக்கமளித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:
திபெத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பிரமாண்ட அணை கட்டும் திட்டம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளை இந்த திட்டம் ஒருபோதும் பாதிக்காது. நதி செல்லும் பாதையில் உள்ள அண்டை நாடுகளுடனான தொடர்பு பாதுகாப்புடன் பராமரிக்கப்படும். பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணம் குறித்த சர்வதேச ஒத்துழைப்புடன், புதிய திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.