30 ஆண்டுகளாக இழுக்கும் ஆயுதக்கடத்தல் வழக்கு: குற்றவாளியை நாடு கடத்த டென்மார்க் கோர்ட் மறுப்பு
30 ஆண்டுகளாக இழுக்கும் ஆயுதக்கடத்தல் வழக்கு: குற்றவாளியை நாடு கடத்த டென்மார்க் கோர்ட் மறுப்பு
ADDED : ஆக 30, 2024 08:24 AM

புதுடில்லி: புருலியா ஆயுதக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை டென்மார்க் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1995ம் ஆண்டு மேற்கு வங்க வான் பரப்பில் பறந்த விமானத்தில் இருந்து, துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்ச்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூட்டை மூட்டையாக கீழே வீசப்பட்டன. அவற்றை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், வெளிநாட்டு விமானம், ஆயுதங்களை போட்டது தெரியவந்தது. இதையடுத்து விமானத்தை இந்திய விமானப்படை மடக்கியது. அதில் வந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், அந்த விமானத்தில் வந்த முக்கிய குற்றவாளியான டென்மார்க் நாட்டை சேர்ந்த கிம் டேவி, விமான நிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளியேறி, நேபாளம் வழியாக தப்பி விட்டார். அவர் டென்மார்க்கில் பதுங்கியிருப்பது 2007ம் ஆண்டு தான் தெரியவந்தது. அப்போது முதல் இந்தியாவுக்கு நாடுகடத்தும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு டென்மார்க் அரசும் ஒப்புக்கொண்டது.
அதை எதிர்த்து டேவி சார்பில் அந்நாட்டு கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இப்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தங்களுக்கு மாறாக அவர் இந்தியாவில் துன்புறுத்தப்படுவார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீதான நாடுகடத்தல் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டேவியின் வக்கீல்களுக்கும், மத்திய அரசுக்கும் 6 ஆண்டுகளாக பேச்சு நடந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு ஆயுதம்
வழக்கில் தொடர்புடைய கிம் டேவி கூறுகையில், 'இந்த ஆயுதங்கள், ஆனந்த மார்கா என்ற குழுவினருக்காக போடப்பட்டவை. மேற்கு வங்கத்தில் அப்போதைய கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து போராடுவதற்காக அவை வழங்கப்பட்டன. ஆயுதங்கள் வழங்கும் ஏற்பாடு, அப்போதைய மத்திய அரசுக்கும் தெரியும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது' என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
இவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ., உளவாளி, அதனால் தான் அவர் காப்பாற்றப்பட்டு விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய லாட்வியா நாட்டை சேர்ந்த 5 பேர், பிரிட்டனை சேர்ந்த பீட்டர் பிளீச் ஆகியோருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லாட்வியா நாட்டவர்கள் 5 பேர், 2000ம் ஆண்டிலும், பீட்டர் பிளீச் 2004ம் ஆண்டிலும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.