தவறுதலாக சிறை தண்டனை; இந்தியர் நாடு கடத்தல் நிறுத்தி வைப்பு
தவறுதலாக சிறை தண்டனை; இந்தியர் நாடு கடத்தல் நிறுத்தி வைப்பு
ADDED : நவ 05, 2025 01:27 AM

நியூயார்க்: செய்யாத கொலைக்காக, 43 ஆண்டுகளாக தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வேதத்தை, நாடு கடத்துவதை நிறுத்துமாறு அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
கடந்த 1980ம் ஆண்டு, பென்சில்வேனியாவின் சென்டர் கவுண்டியைச் சேர்ந்த 19 வயதான தாமஸ் கின்சர் கொலை வழக்கில், சுப்ரமணியம் வேதம் கைது செய்யப்பட்டார்.
ஆதாரமின்றி, சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டதாக பென்சில்வேனியா நீதிமன்றம் அவரது தண்டனையை சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, 43 ஆண்டுகளுக்கு பின் அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் மற்றொரு பழைய போதைப்பொருள் வழக்கு ஒன்றை காரணம் காட்டி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர். அமெரிக்காவில் தற்போதுள்ள விதிகளின்படி, சுப்ரமணியத்தை நாடு கடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

