கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்; காலிஸ்தான் ஆதரவு கும்பல் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்; காலிஸ்தான் ஆதரவு கும்பல் அட்டூழியம்
ADDED : நவ 04, 2024 07:32 AM

ஒட்டவா: கனடாவின் பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிராம்டனில் ஹிந்து கோவில் ஒன்று உள்ளது. எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இந்த கோவில் வளாகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் பக்தர்கள் மீது குச்சிகளை வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கனடியர்களும் தங்கள் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி., சந்திரா ஆர்யா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்டனில் உள்ள ஹிந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிராம்டன் மேயர் கூறியதாவது: கனடாவில் மத சுதந்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். அனைவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகே நடக்கும் வன்முறைச் செயல்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மக்களை ஒன்றிணைத்து குழப்பத்திற்கு முடிவுகட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.